#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மண்டைக்காடு
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மண்டைக்காடு
133.#அருள்மிகு_பகவதி_அம்மன்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : பகவதி அம்மன்
தல விருட்சம் : வேம்பு மரம்
புராண பெயர் : மந்தைக்காடு
ஊர் : மண்டைக்காடு
மாவட்டம் : கன்னியாகுமரி
ஸ்தல வரலாறு :
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. மண்டைக்காடு காடாக இருந்த போது ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி பரவியதைக் கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார். சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒருநாள் கால்நடைகளை அழைத்துச் சென்ற சிறுவர்கள் பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடியுள்ளனர். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது விழுந்தது. அதனால் புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அப்போது ஒருவர் சாமி ஆடி குறி சொல்லியிருக்கிறார். இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் புற்றின் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். அதன்படி சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசியிருக்கிறார்கள். உடனே ரத்தம் வருவது நின்றது என்றும் கூறப்படுகிறது.
இதேபோல் கேரள மாநிலம் கொல்லம் நகரில் இருந்து பெண் யோகினி மண்டைக்காடு வந்ததாகவும், அந்தப் பெண் கடற்கரையில் தவம் இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததாகவும், அதுவே பிற்காலத்தில் பகவதி தேவியாக வழிபாட்டுக்குரியதானதாகவும் கூறப்படுகிறது. எனவே யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. கேரளத்தில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்த காலகட்டத்தில் தமிழக அரசால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கொடிமரமும் நடப்பட்டது. தற்போது தாமிரத்தகடு பொதியப்பட்ட நிரந்தர கொடிமரம் உள்ளது. இந்த கோவிலின் கருவறை, நமஸ்கார மண்டபம் அல்லது பஜனை மண்டபம் அனைத்தும் கேரள பாணியில் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரையால் ஆனது. கருவறையில் புற்று வடிவில் காட்சி தரும் அம்மனுக்கு 1909-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 30 முதல் 40 துலாம் அரைத்த சந்தனம் பூசப்படுகிறது. வடக்குத் திருமுகம் வெள்ளியிலானது. வெள்ளி மகுடமும் உண்டு. அர்ச்சனா படிமமும், விழாப்படிமும் கருவறையில் உள்ளன.
கோயில் சிறப்புகள் :
•15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு.
•இந்த கோவிலில் பகவதி அம்மன் வடக்கு முகமாக புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார்.
•சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய மண் புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது. அம்மன் 5 முகங்களைக் கொண்டவள். புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார்
•கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர், கடல் நாகர் (கடலில் இருந்து கிடைத்த கடல் நாகர் சிலை) சன்னதிகளும் உள்ளன.
•இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
•இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.
•சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி செல்வதைப்போல, மாசிக்கொடை விழாவுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களால் முடிந்த அளவு விரதமிருந்து இருமுடிகட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
•ஆவணி மாதம் அஸ்வதி நட்சத்திரம் அன்று நடைபெறும் பொங்கல் விழாவும் இந்த கோவிலின் சிறப்பு நிகழ்வாகும். இதில் கோவிலின் முன்பு 4 திசைகளிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
•சேரர்கள் காலத்தில் இந்தப் பகுதி பனங்காடாக இருந்து வந்துள்ளது. இந்த பனங்காட்டில் புற்று வடிவில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். அப்போது பனங்காட்டு காளியாக வழிபடப்பட்டவள், பிறகு கேரள மக்களின் வழக்கப்படி ‘பகவதி அம்மன்’ என்றானாளாம்.
•’விழி மூடாத பகவதி’ இவள் என்கிறார்கள். தீயவர்களைத் அழிக்கவும், நல்லவர்களைக் காக்கவும் எப்போதும் விழித்திருப்பவள் என்பதால் இந்தப் பெயராம். இவளை வேண்டிக்கொண்டு தொடங்கும் எந்தக் காரியமும் தடையில்லாமல் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
•ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இங்கு அமைத்த ஸ்ரீசக்கரமும் அம்மனின் வடிவமாக இருந்து பக்தர்களைக் காத்து வருகிறதாம்.
திருவிழா:
மாசிப் பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா – 10 லட்சம் பக்தர்கள் கூடுவர்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்,
மண்டைக்காடு – 629 252,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம்.
போன்:
+91 – 4651 – 222 596
அமைவிடம் :
நாகர்கோவிலிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. குளச்சலுக்குத் தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு கிராமம்
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #famoustemples #mandaikadu #bakavathiamman #ammantemples #kanniyakumari #மண்டைக்காடு #மண்டைக்காடுபகவதிஅம்மன் #பகவதிஅம்மன் #பெண்கள்சபரிமலை #பொங்கல்திருவிழா #அம்மன்கோயில்கள் #kovilvastu #SriAandalVastu #DrAndalPChockalingam