#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழபாடி

September 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழபாடி
240.#அருள்மிகு_வைத்தியநாதர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : வைத்தியநாதசுவாமி
அம்மன் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம் : பனை மரம்
தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி
ஊர் : திருமழபாடி
மாவட்டம் : அரியலூர்
ஸ்தல வரலாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க வேண்டி தவம் இருந்தார், சிலாத முனிவர். அவர் முன்பாக தோன்றிய ஈசன், “நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்” என்று அருளினார்.
அதன்படியே பூமியில் இருந்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாத முனிவர், அதனுள் ஓர் அதிசய குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தை நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கியது. அப்போது ஒரு அசரீரி, “பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திற” என்று ஒலித்தது. சிலாத முனிவரும், பெட்டியை மூடி மீண்டும் திறந்தார். இப்போது முந்தைய வடிவம் நீங்கி, அதில் அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு ‘செப்பேசன்’ என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.
மகன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து, முனிவரின் மனைவியும் துயருற்றார். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.
இதையடுத்து மற்றொரு சிறப்புமிகு நாளில், சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை மணப்பெண்ணாக பேசி முடித்தார்.
இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவை யாற்றில் இருந்து நந்தியம்பெருமான், குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயம்பிரகாசைக்கும் வெகு சிறப்பாக திரு மணம் நடைபெற்றது.
கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம். இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார்.
தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.
கோயில் சிறப்புகள்:
•இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. “நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்’ என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
•ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார்.
•இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன.
•சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது.
•மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.
•கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது. முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூரில், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை மழவர்கள் என்ற பழங்குடியினர் வசித்து வந்தனர். இவர்களில் சிறந்த போர்வீரர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்று அழைக்கப்பட்டது. இதுவே பின்னாளில் திருமழப்பாடி என்று மருவியதாக சொல்கிறார்கள்.
•நந்திதேவருக்கு சுயஸாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம்.
•திருமால், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம் இது.
•சுந்தரர் கனவில் இறைவன், மழபாடி வர மறந்தனையோ என்று உணர்த்திட, உடனே அவர் மழபாடி சென்று வழிபட்டத் தலம்.
•சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த களங்கத்தை ஈசன் போக்கியருளியதால் இறைவனை, வைத்தியநாதர் என்றும் பெயர் பெற்றார்.
•இத்தலத்தில் பாய்வது கொள்ளிட நதியாகும். இந்நதி உத்தரவாகினியாக– வடக்கு நோக்கிப் பாய்ந்தோடுகிறது. இது மிக அரிதான சிறப்பு.
• இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
•இந்த கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
•பிரம்மனின் சத்தியலோகத்திலிருந்து புருஷா மிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இதை அறிந்த பிரம்மன் லிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றான். பிரம்மன் அந்த லிங்கத்தை எடுக்க முயல, அது அவனின் கைக்கு வர மறுத்து அது முடியாது போகவே இது, வைரத்தூணோ என்று கூறினான். பிரம்மன், வைரத்தூணானவனோ எனக் கூறியதால், இவ்விறைவனை வைரத்தூண் நாதர் என்றும், வச்சிரதம்பேஸ்வரர் என்றும் ஈசனுக்கு பெயர்கள் ஏற்பட்டது.
•திருமழபாடி கோயிலில் சந்நிதிக்கு நேரே நந்தி இல்லை. திருப்பூந்திருத்தி சிவாலயத்திலும் நந்தி விலகியுள்ளது. இது ஞானசம்பந்தப் பெருமானுக்குக்காக விலகியது. நாவுக்கரசரும் ஞானசம்பந்தப் பெருமானும் இத்திருக்கோவிலுக்கு எழுந்தருளி வழிபாடு செய்ய வந்தனர். நாவுக்கரச பெருமான் தனது கைகளால் சிவத்தொண்டு செய்த இக்கோவிலை கோயிலின் தன் கால்களால் மிதிக்க மனமின்றி சம்பந்தப் பெருமான் கோயிலின் வெளியே நின்றார். அப்போது இறைவன் நந்திதேவரை விலகச் செய்து சம்பந்தப் பெருமானுக்குத் திருக்காட்சி அருளினார் என்று திருப்பூந்துருத்தி தல வரலாறு கூறுகிறது.
•திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் மொத்தம் ஆறு பதிகங்கள் பாடப்பெற்றத் தலமாகும்.
•வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “விரும்பி நிதம் பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை மன்னும் மழபாடி வச்சிரமே” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில்,
திருமழபாடி-621851.
அரியலூர் மாவட்டம்.
போன்:
+91 4329 243282,9790085702, 9750302325
அமைவிடம்:
அரியலூர், தஞ்சாவூர் மற்றும் லால்குடியிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் திருமழபாடி உள்ளது. நேரடி பஸ் வசதி உள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #திருமழபாடி #vaidhyanathaswami #அழகம்மை #sundarambigai #thirumalapadi #padalpetrasthalam #devarasthalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =